சென்னை: முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக திமுக அரசு போலி விளம்பர பிரச்சாரம் செய்து வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடி மதிப்பில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தென் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காத தொழில்வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், தூத்துக்குடியில் விண்வெளிப் பூங்கா அமைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டாக முதல்வர் கூறினார். ஆனால், நிறுவனங்கள் ஏதுவும் தொடங்கப்பட்டவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. திமுக ஆட்சிக்கு முன்பாகவே முதலீட்டை உறுதி செய்திருந்த பல நிறுவனங்களின் ஒப்பந்தங்கள், இந்த மாநாட்டில் கணக்கு காட்டப்பட்டதாக தகவலும் வெளியாகின.
முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது துபாய் 6 ஒப்பந்தங்கள், அமெரிக்காவில் 19, ஸ்பெயினில் 3, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் தலா 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் இந்த ஒப்பந்தங்களின் தற்போதைய நிலைமை என்னவென்பதை திமுக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில், ரூ.10.30 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு, 32.29 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 898 திட்டங்களை ஈர்த்துள்ளதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். ஆனால் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகளாலும் பயனில்லை.
தமிழ்நாடு தொன்றுதொட்டு உற்பத்தி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் நமது நாட்டின் மீது ஏற்பட்டு வரும் நன்மதிப்பு, தமிழகத்தின் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்ற காரணங்களால் தொழில்துறையில் தமிழகம் சாதித்து வருகிறது.
ஆனால் போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவினர் இதனை தங்கள் சாதனையாக விளம்பரப்படுத்த முடியுமா? எனவே, தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து மக்களுக்குத் தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது அமைச்சர்களும் அள்ளி விடும் அறிவிப்புகள் வெறும் வெற்று விளம்பர அறிவிப்புகள் மட்டுமே என்பது உறுதியாகும். இவ்வாறு கூறியுள்ளார்.