முட்டுக்காடு: சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கர் பரப்பளவில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மே 29) நடைபெற்றது.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 37.99 ஏக்கர் பரப்பளவில் வெளிநாடுகளில் உள்ளது போன்ற கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த 525 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் 10,000 பேர் ஒரே நேரத்தில் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்கம், 5,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான மாநாட்டுக் கூடம், பல்வேறு சிற்றரங்கங்கள், திறந்தவெளி அரங்குகள், உணவு விடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் இந்த அரங்கம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்.
இந்த அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (மே 29) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்கள் நடத்திடும் வகையில் நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் ஐந்து லட்சம் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 525 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
குறிப்பாக, உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாக கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமையவுள்ளது. 18 மாதம் அரங்கம் கட்ட இலக்கு நிர்யிக்கப்பட்டுள்ளது. அதற்கு பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 30 ஏக்கர் நிலத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நிலம் கோயில் நிலம் என்பதால் சற்று சட்ட சிக்கல் உள்ளது. விரைவில் அந்த இடமும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதய வர்மன், திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜ், பொதுப்பணித்துறையின் மண்டல தலைமை செயற்பொறியாளர் கண்ணன் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர்சங்கீதா, ஆகியோர் கலந்து கொண்டனர்.