தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக செங்கல்பட்டு ஆட்சியர் தி. சினேகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக, 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 390 இடங்கள் பாதிக்கப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் முடிச்சூர் ஊராட்சியும் அடங்கும். குறிப்பாக, 2015-ம் ஆண்டு முதல்,மழைக்காலங்களில் முடிச்சூர் ஊராட்சி பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகிவருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் மழை காலங்களில் முடிச்சூர் பாதிக்கப்படுவது தடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் மழையால் பாதிப்பு ஏற்படும் போது உயர் அதிகாரிகள் முதல், அனைத்து தரப்பினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து நிரந்தரமாக தீர்வு காணப்படும் என சொல்கின்றனர். அதேபோல் அரசியல்வாதிகளும் ஆய்வு செய்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் தீர்வு ஏற்படுவது பேச்சு அளவில் மட்டும் தான் உள்ளது. செயலில் இன்னும் எந்த பணியும் நடைபெறவில்லை. நிதி ஒதுக்கும்படி ஊரக வளர்ச்சி துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இது உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் நிதி ஒதுக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக் கின்றனர். அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என முடிச்சூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, மழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து முடிச்சூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி. தாமோதரன் கூறியது: வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தால் முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் முடிச்சூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் புகுந்து, பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இதற்கு, இப்பகுதியில் நிரந்தர மழைநீர் வடிகால் போதுமான அளவில் இல்லாததே காரணமாக உள்ளது.
மழைக்கு முன்பும், பின்பும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அதிகாரிகள், எம்.எல்.ஏ, எம்.பி. அமைச்சர்கள் ஆகியோர் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காணப்படும் என கூறி செல்கின்றனர். ஆனால் தீர்வு தான் இன்று வரை கிடைக்கவில்லை.
இதனிடையே முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பல கோரிக்கை மனுக்களை அளித் திருக்கிறோம். குறிப்பாக முடிச்சூர் ஊராட் சிக்குட்பட்ட, 11-வது வார்டில் மழைநீர் வடிகால் அமைத்து, நேதாஜி நகர், 2-வது பிரதான சாலை மற்றும் மேற்கு லட்சுமி நகர், ஏ.எல்.எஸ். கீரின் லேன்ட், 1-வது பிரதான சாலையில் அமையவிருக்கும் கால்வாய் மூலம் மழை நீரை அடையாறு ஆற்றில் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
தொடர் அழுத்தம் காரணமாக புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சார்பில் ரூ.6 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து. ஊரக வளர்ச்சித்துறை மூலம் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எங்களுக்கு ஆண்டுதோறும் இது ஒரு பெரும் பிரச் சினையாகவே உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அப்பகுதி மக்கள் மழை, வெள்ள காலங்க ளில் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்