சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சிவாயிலாக துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உதயநிதி பேசியதாவது:உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. அதேபோல, மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் 17 லட்சம் வந்துள்ளன.
இந்த மனுக்களை காகிதமாக பார்க்காமல், மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும். முடிந்த அளவுக்கு விரைவாக தீர்வுகாண வேண்டும். தீர்வுகாண இயலவில்லை எனில் அதன் காரணத்தை முறையாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்.. திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்த நிகழ்வுக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் வைகை ஆற்றில் கொட்டப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மக்களின் வலிகளை, உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதுபோல நாடகமாடும் திமுக அரசுக்கு வரும் 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: சிவகங்கையில் வைகை ஆற்றில் அலட்சியமாக மனுக்களை கொட்டியுள்ள சம்பவம், திமுக ஆட்சியின் அவலநிலைக்கான சாட்சியாகும்.
பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை: திட்டங்களுக்கு ஆடம்பரமான பெயர்களை வைப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்துக்காக வீணாக்குவதும் திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்டது. தற்போது இதை அம்பலப்படுத்தும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதக்கின்றன. இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதில் சொல்ல நேரிடும்.
பாமக தலைவர் அன்புமணி: அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு, திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதை பார்த்தாலே, மக்களுக்கு எவ்வளவுமதிப்பு கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்லாம். அடுத்த 6 மாதங்களில் திமுகஆட்சி நிறைவடையப் போகிறது, ஆனால் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன.