சென்னை: ‘23-ம் புலிக்கேசி’ பட பாணியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை ‘முகமூடியார்’ பழனிசாமி என்று அழைக்க வேண்டும் என்று இபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி வீர வசனம் பேசினார். ‘நான் தன்மானம் மிக்கவன்’, ‘எனக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் அல்ல’, என்றெல்லாம் பேசினார். மேலும், பத்திரிகைகளில் அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டது தெடர்பாக வெளிவந்த செய்திகளுக்கு கோபித்துக் கொண்டவர், வானிலையை காரணம் காட்டி தள்ளி வைத்ததாக கதை விட்டார்.
தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்துவிட்டு, இரவு அமித் ஷாவை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அமித் ஷா எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக ஏற்கனவே, ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துவிட்டன. இவைதான் பத்திரிகைகளில் செய்தியாக வெளி வந்தன. இதற்கு எல்லாம் பொய் சொல்லி எடப்பாடி பழனிசாமி யாரை ஏமாற்ற பார்க்கிறார்?.
தமிழக மக்களையும், மற்ற அரசியல் கட்சிகளையும் இனிமேலும், எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்த பின் வெளி வந்தவர் ஏன் முகத்தை முடிக்கொண்டு சென்றார் ?.
‘23-ம் புலிக்கேசி’ பட பாணியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை முகமூடியார் பழனிசாமி என்று அழைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்வது எல்லாம் பொய். சிலர் எடப்பாடி பழனிசாமி செய்யும் துரோகத்தை ராஜதந்திரம் என்று கூறுகின்றனர். ஆட்சி பொறுப்பில் உள்ளார் என்பதற்காக அப்போது ஆதரித்துப் பேசிய சிலர் இப்போது அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி கண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றப் பார்க்கிறார். என்னதான் பண பலம், படை பலம் இருந்தாலும் வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வியை தழுவுவது உறுதி.” என்று தினகரன் கூறினார்.
முன்னாதாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அதிமுக எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமித் ஷா வீட்டில் இருந்து காரில் வெளியேறிய பழனிசாமி தனது முகத்தை மறைத்துக் கொண்டதாக காணொலி ஒன்று இணையத்தில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.