மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளை மீட்கவும், பாதுகாக்கவும் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை முறையாக மீட்டு பராமரிக்கவும், கோயிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக சுமார் 1,200 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அது முறையாக பராமரிக்கப்படுவதில்லை. 2021-ம் ஆண்டு நீதிமன்றம் அனைத்து கோயில் சொத்துகளை மீட்டு பராமரிப்பது தொடர்பாக உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து வாதங்களை ஏற்கொண்ட நீதிபதிகள், “2021-ம் ஆண்டு கோயில் சொத்துகளை மீட்டு பாதுகாப்பது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என அரசு தரப்பினரிடையே கேள்வி எழுப்பினர். அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
அதையடுத்து அரசு தரப்பில் கோரிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதிகள், 2021-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.