சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: “இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது. இன்று காலை ஜூலை 29-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்கள் ஒரு வாரத்துக்கு முன் நடந்த மற்றொரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. அச்சம்பவத்தில் நான்கு மீனவர்கள் தங்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் இதேபோன்று கைது செய்யப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவமாகும். தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகலால், மீனவர்களின் குடும்பத்தினர் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
மேலும், அவர்களின் வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.