முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கசாமி, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் புதுச்சேரி மாநில முதல்வராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அவர் முதல்வராக வந்ததை ஜீரணிக்க முடியாத அவரது உட்கட்சி ‘நண்பர்கள்’ செய்த உள்ளடிகளால் 2008-ல் முதல்வர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து வைத்தியலிங்கத்தை இடைக்கால முதல்வராக்கியது காங்கிரஸ்.
இதையடுத்து, 2011-ல் காங்கிரஸை விட்டு வெளியேறிய ரங்கசாமி, ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ என்ற கோஷத்தை முன் வைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். 2011 தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார் ரங்கசாமி. அந்த சமயத்தில், ரங்கசாமியின் மருமகன் உறவுமுறை கொண்ட நமச்சிவாயத்தை மாநில தலைவராக்கியது காங்கிரஸ்.
மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் தூக்கி நிறுத்திய நமச்சிவாயம், 2016-ல் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் மீண்டும் அரசியல் சூது விளையாடியதால், தேர்தலில் போட்டியே போடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி முதல்வரானார். இதனால் தனது முதல்வர் கனவு கலைந்து போய் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார் நமச்சிவாயம்.
ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி இருந்ததால் நாராயணசாமியை நிம்மதியாய் முதல்வர் நாற்காலியில் உட்கார விடவில்லை. மாநில ஆளுநராக கிரண்பேடியை அனுப்பி வைத்து அவரை சூப்பர் முதலமைச்சராக செயல்பட வைத்தது மத்திய பாஜக அரசு. இதனால், அந்த ஐந்து ஆண்டுகளும் கிரண்பேடியுடன் கம்பு சுற்றுவதற்கே நாராயணசாமிக்கு கால நேரம் போதாமல் போனது.
இதையடுத்து, காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆட்சியின் இறங்கு முகத்தில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் என பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தார்கள். தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என தெரிந்ததாலோ என்னவோ 2021 சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. முதலமைச்சரே போட்டியிடாமல் ஒதுங்கியது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அதுபோலவே அந்தத் தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதேசமயம், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. ரங்கசாமி மூன்றாவது முறையாக முதல்வரானார்.
மீண்டும் வரலாறு திரும்பியது. 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தோற்று காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதனால் இண்டியா கூட்டணி மீண்டும் சுறுசுறுப்பானது. மாநிலத்தின் தேவைகளுக்காக டெல்லி சென்று பிரதமரை சந்திக்காதது, மாநில அந்தஸ்து பெற போதிய நடவடிக்கை எடுக்காதது, நிதி கமிஷனில் சேர்க்காதது என முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பல பிரச்சினைகள் இப்போது வரிசைகட்டி நிற்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள இண்டியா கூட்டணிக் கட்சிகள் அரசியல் வியூகங்களை வகுக்கத் தொடங்கி உள்ளன.
முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அடுத்தது நமது ஆட்சிதான் என்கிற தெம்பில் தங்களது தொகுதிகளுக்குள் வலம்வரத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் முக்கியமாக, கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் போட்டிக்கே வராத முன்னாள் முதல்வர் நாராயணசாமி இம்முறை தேர்தல் களத்துக்கு வர தயாராகிவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள். அதற்கேற்பவே, அறிக்கைகள் விடுவது, அரசுக்கு எதிரான போராட்டங்களை அறிவிப்பது என அவரது அரசியல் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன.
ஆனால் புதுச்சேரி காங்கிரஸ் புள்ளிகளோ, “முதல்வராக இருந்த நாராயணசாமி கடந்தமுறை தேர்தலில் நிற்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களும் போதிய முக்கியத்துவம் தந்து அவரைச் சந்திக்கவில்லை. கட்சியிலும் அவருக்கு எவ்விதமான முக்கிய பொறுப்பையும் வழங்கவில்லை. உள்ளூர் நிர்வாகிகளில் சிலரும் நாராயணசாமிக்கு எதிரான மனநிலையிலேயே இன்னமும் இருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்திருந்தாலும் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் நாராயணசாமி. ஆனால், அவரது விருப்பத்தை தலைமை நிறைவேற்றுமா என்று தான் தெரியவில்லை” என்கின்றனர்
இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என நாராயணசாமியிடம் கேட்டதற்கு, “என் மேல் என்ன அக்கறை உங்களுக்கு… தேர்தலில் நிற்கிறேன் – நிற்கலை; அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்” என்றார். நீங்கள் நெல்லித்தோப்பு, ராஜ்பவன் அல்லது தொகுதியில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, “புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் நிற்பேன்.
உங்களில் யார் என்ன சொல்வார்கள் எனப் பார்க்கிறேன்” என்றார். அப்படியானால் தேர்தலில் நிற்க தயாராகிவிட்டீர்களா எனக் கேட்டதற்கு, “கட்சி தலைமை உத்தரவிட்டால் நிற்பேன்; இல்லாவிட்டால் நிற்கமாட்டேன். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்றார். உங்களின் விருப்பத்தை மேலிடத்தில் சொல்லியாச்சா எனக் கேட்டதற்கு, “காங்கிரஸில் விருப்பத்தை வேறு கேட்பார்களா?” என்று சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார் நாராயணசாமி. காங்கிரஸ் தலைமை கேட்பது இருக்கட்டும்… நான் தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என புதுச்சேரி மாநில காங்கிரஸ் காரர்களிடம் ஒருமுறை நாராயணசாமி கேட்டுக்கொள்வது நல்லது.