அதிமுக ஆட்சியில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் இருந்தவர் சேலம் ஆர்.இளங்கோவன். எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக சித்தரிக்கப்படும் இவர் மீது திமுக-வுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. இந்தச் சூழலில், 2026-ல் இளங்கோவன் தான் போட்டியிடுவதற்கான தொகுதியை தயார்படுத்தி வருவதாக சேலம் அதிமுக வட்டாரத்தில் பலமான பேச்சு கிளம்பி இருக்கிறது.
2011 தொடங்கி கடந்த மூன்று தேர்தல்களாக சேலம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி தான் பெருவாரியான வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த முறை, மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வென்றது. எஞ்சிய 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியதற்கு முழுமுதற் காரணம் எடப்பாடி பழனிசாமியும் சேலம் இளங்கோவனும் தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ் முதல்வரான போது அதன் பின்னணியில் இருந்து அனைத்து ‘செட்டில்மென்ட்’களையும் கவனித்துக் கொண்டவர் இளங்கோவன் தான்.
அதற்கு கைம்மாறாக, தன்னிடம் இருந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை அவருக்கு வழங்கினார் இபிஎஸ். ஒருவேளை, இளங்கோவன் அப்போது எம்எல்ஏ-வாக இருந்திருந்தால் அவரை அமைச்சராகக் கூட ஆக்கி இருப்பார். ஆனால், அது நடக்கவில்லை. இந்த நிலையில் தான் இன்னொரு வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக இம்முறை இளங்கோவன் தேர்தலில் குதிக்க தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள் சேலம் அதிமுக-வினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “2021-லேயே இளங்கோவனுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அமைந்தது. ஆனால், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்ததால், சேலத்தில் அவர் இருந்து செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் இளங்கோவன் தான் கவனித்துக் கொண்டார். அதனால், இளங்கோவன் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போது சேலம் மாவட்ட அதிமுக-வையே தனது கைக்குள் வைத்திருக்கும் இளங்கோவன், அந்த தைரியத்தில் துணிந்து தேர்தல் களத்துக்கு வருகிறார்.
2006-ல் பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் தான் இளங்கோவன். அதன் பிறகு அவருக்கு தேர்தல் வாய்ப்பு அமையவில்லை. தொகுதி மறு சீரமைப்பில் பனமரத்துப்பட்டி, தலைவாசல் தொகுதிகள் நீக்கப்பட்டுவிட்டன. கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள். இவை தவிர, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, ஓமலூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் சேலம் தெற்கு தவிர, மற்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளராக நிறுத்துவதை அனைத்துக் கட்சிகளும் வழக்கமாக வைத்துள்ளன.
இளங்கோவன் தனது முதல் விருப்பமாக சேலம் தெற்கு தொகுதியைத்தான் தேர்வு செய்து வைத்திருக்கிறார். மேட்டூர் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் அளவுக்கு அங்கேயும் அதிமுக வலுவாக இருக்கிறது. அதனால் மேட்டூர் தொகுதியும் அவரது இன்னொரு சாய்ஸாக இருக்கிறது.
மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் 50 வாக்காளர்களுக்கு ஒரு பூத் கமிட்டியை அமைத்திருக்கும் இளங்கோவன், மேட்டூர் தொகுதியில் 20 முதல் 30 பேருக்கு ஒரு பூத்கமிட்டியை அமைத்திருக்கிறார். புறநகர் மாவட்டத்தில் கட்சியின் துணை அமைப்புகளில் மேட்டூர் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கே பொறுப்புகளை வாரி வழங்கி இருக்கிறார். ஒருவேளை, கூட்டணி கட்சிகளுக்காக இந்த இரண்டு தொகுதிகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வந்தால் வீரபாண்டியையும் இன்னொரு சாய்ஸாக வைத்திருக்கிறார் இளங்கோவன்” என்றனர்.
இளங்கோவன் தனக்கான தொகுதியை தேடிக் கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, தங்களுக்கு சீட்டுக்காக சிபாரிசு செய்யக் கோரி சேலம் மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்ட அதிமுக-வினரும் அவரது வீட்டில் தவம் கிடந்துவிட்டுப் போகிறார்களாம்!