திருப்புவனம்: என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார். மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிவிட்டார். பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே எங்கோ சென்று விட்டார். என்னை மட்டுமல்ல, 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார் நிகிதா.
பணம் பறிப்பதே வேலை… திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் விடுவார்.பின்னர், திருமணம் செய்தவர்கள் மீது வரதட்சணை புகார் கொடுத்து, அந்த குடும்பத்தை சித்திரவதைக்கு உள்ளாக்குவார். மிரட்டி பணம் பறிப்பது தான் அவரது வேலை. திருமண மோசடி மட்டுமின்றி, பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர்.
கோயில் காவலாளி விவகாரத்தில், புகார் கொடுத்தவர் குறித்து போலீஸார் விசாரித்திருக்க வேண்டும். நகை திருடுபோனது பொய்யான குற்றச்சாட்டு. கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், தனது ஆளுமையை நிலைநாட்ட புகார் கொடுத்துள்ளார்.
எனவே, கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும், நிகிதா குடும்பத்தை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். நிகிதா தந்தை கோட்டாட்சியராக இருந்தவர். அவரது அம்மா அரசு ஊழியர். அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே, திருமண மோசடியில் 2 எஸ்.பி.கள், ஒரு டிஎஸ்பி உதவி செய்தனர். அதேபோல, தற்போதும் அதிகாரத்தில் இருக்கிறவர்கள் அவர்களுக்கு உதவி செய்திருக்கலாம். இவ்வாறு திருமாறன்ஜி கூறினார்.