தமிழ்நாடு மின் வாரியத்துக்கு சொந்தமான கிடங்குகள் தாம்பரத்தில் உள்ளன. இவற்றில், டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ், மீட்டர், கேபிள், மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. போதிய உபகரணங்கள் இருந்தாலும், அங்குள்ள ஊழியர்கள் இவற்றை முறையாக விநியோகிப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் சிலர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது: கிடங்குகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள ஊழியர்கள், உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை.
இதற்காக அவர்கள் உதவி பொறியாளர்களிடம் பணம் எதிர்பார்க்கின்றனர். பொருட்களை தராமல் தாமதம் செய்கின்றனர். புதிய சாதனம் பொருத்தும்போது பழைய சாதனத்தை முறையாக கிடங்குகளில் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் அவை முறைகேடாக விற்கப்படுகின்றன. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உபகரணங்கள் இருப்பு விவரத்தை வழங்குமாறு மேற்பார்வை பொறியாளர்களிடம் கேட்கின்றனர். ஆனால், இதுகுறித்து போலியான அறிக்கைகளே அளிக்கப்படுகின்றன.
இதனால், கிடங்குகளில் உள்ள பொருட்களின் உண்மையான இருப்பு விவரத்தை அறிய முடியவில்லை. எனவே கிடங்குகளில் உள்ள அனைத்து சாதனங்களின் இருப்பு விவரத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் எந்த அலுவலகத்தில் என்ன பொருட்கள் உள்ளன என்பதை உயர் அதிகாரிகள் தங்கள் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.