தமிழகம் முழுவதும் அனைத்து மின் கம்பங்களிலும், கேபிள் மற்றும், தனியார் இன்டர்நெட் வயர்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும், மின்பாதைகளில் இடையூறாக கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள்மற்றும், விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
பல சமயங்களில் சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் வயர்கள் வாகனங்களில் சிக்கும் போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன.
சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்க விட்டும், வீடுகளின் மீது அனுமதி இல்லாமலும் கேபிள் வயர்களை எடுத்துச் செல்கின்றனர்.
இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டு செல்லப்படுகின்றன என்பது யாரும் விடை அளிக்க முடியாத கேள்வியாக உள்ளது. பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலையையும் காண முடிகிறது. இவற்றை முறையாக சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தாம்பரம் அருகே ஆக,10-ம் தேதி, செம்பாக்கம் அடுத்த காமராஜபுரம் பகுதியில், கார் கம்பெனி ஊழியர் அஸ்வின் (35) என்பவர், தனியார் கேபிள் மூலம் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து செம்பாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரமேஷ், முனிநாதன் கூறியதாவது: மின்கம்பங்களில் கேபிள் வயர்கள் கட்டப்படுவதால் அதனை பராமரிப்பதற்கு ஏறி, இறங்கக்கூடிய கேபிள் தொழிலாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதேபோல் மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏறும்போது கேபிள் வயர்கள்இடையூறாக உள்ளன.

இதனால் மின் ஊழியர்கள் மின்கம்பங்களில் இருந்து தவறி விழுந்தோ அல்லது, கேபிள் ஒயர்களுக்கு பயன்படும் ஸ்டே கம்பிகளில் மின்சாரம் பாய்வதனால் ஏற்படும் தவறுகளாலோ, உயிரிழப்பு அல்லது பலத்த காயமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பல இடங்களில் வயர்கள்அறுந்து சாலையின் குறுக்கே இடையூறாக உள்ளன. அவ்வாறு இருக்கும் வயர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.
அதே வேளையில் கனரக வாகனங்கள் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் போது வயர்கள் சிக்கி துண்டாகிறது. இதனால் பின்னால் வருபவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். பலத்த காற்று வீசும் சமயங்களில் மின் வயர்களும், கேபிள் வயர்களும் ஒன்றுடன் ஒன்று உராய்வதால், மின்தடை மற்றும் மின்சாதன பழுது ஏற்படுகின்றன.
இவற்றை தவிர்க்க மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் விநியோகித்து நடவடிக்கை எடுக்கலாம். இது போன்ற விஷயங்களில் அரசு தலையிட்டு சரியான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும், என்றனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளை கேட்டபோது: “தனியார் கேபிள் நிறுவனத்தினர் தனியாக கம்பம் அமைத்து கேபிள்களை கொண்டு செல்ல வேண்டும்.
நாங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் உயர் அதிகாரிகள் எங்களை கட்டுப்படுத்துகின்றனர். சில இடங்களில் அரசு கேபிள் மின் கம்பத்தில் கட்டப்படுவதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது. அரசுதான் இதற்கு உரிய தீர்வை காண முடியும் ; எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்றனர்.