சென்னை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணியில் உள்ளவர்கள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் இடம்பெற்றுள்ளது.
அதில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்தகட்ட தேர்வு நடைமுறைக்குச் செல்ல முடியும். ஆனால் டிஎன்பிஎஸ்சி-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளதால், அனைத்து அரசு துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளும் உள்ள நிலையில் அவர்களால் தமிழ் மொழிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும், ஆனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாது, எனவே இவர்களுக்கு தமிழ் மொழிதிறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் மின்வாரியத்தில் தற்போது பணியில் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழி தேர்வு சான்றிதழ் இல்லாமல் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் தகவல்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து முதன்மை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளார்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.