தமிழ்நாடு மின்வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மின்சார வாரியமும் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்வாரியத்தின் ஒரு பிரிவான மின்பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடஙகள் எண்ணிக்கை குறித்த தரவுகள் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து முதன்மை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மண்டல அளவில் குழு ஒன்றை அமைத்து அனைத்து மின்பகிர்மான வட்டம், பிரிவு மற்றும் துணை மின் நிலையங்களில் தொடக்க நிலை பணிகளில் முக்கியமான தேவை உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை சேகரித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். வரும் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் இறுதி அறிக்கையை தயார் செய்து, இதுதொடர்பாக நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சமர்பிக்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.