நாமக்கல்: மின்சார துறையைப்பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது. அவர் ஒரு டம்மி அமைச்சர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் என அதிமுக முன்னள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
நாமக்கல்லில் நேற்று (ஜூலை 26) இரவு திமுக தலைமையிலான அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மின் கட்டண உயர்வு பற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் சொல்லி உள்ளார். அவர் பெயருக்கு தான் அமைச்சர் என்பது ஊர் உலகுக்கு நன்றாக தெரியும். அவர் மழைக்கு கூட மின்சார அலுவலகத்திற்கு சென்றதில்லை.
பெயரளவுக்கு ஒரு நாள் மட்டும் சென்றுள்ளார். மற்றபடி அவருக்கு அத்துறையை பற்றி ஒன்றும் தெரியாது. அவர் ஒரு டம்மி அமைச்சர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது மின் கட்டண உயர்வுக்கு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதுதான் காரணம் என அமைச்சர்களும், மின்சாரத்துறை அமைச்சரும் திரும்ப திரும்ப சொல்கின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது நான்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது கடைசி மாநிலமாக தமிழகம் கையெழுத்திட்டது. அதற்கு இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஒன்று 3 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அதை நீக்க வேண்டும். அதுபோல் விவசாயத்திற்கு மீட்டர் வைக்க வேண்டும் என சொன்னார்கள். இவற்றையும் நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அப்போது தான் கையெழுத்திடுவோம் என கூறினார். அவற்றை எடுத்த பின் தான் நாங்கள் கையெழுத்திட்டோம். எங்கேயும் மின் கட்டணம் உயர்த்தபடும் என்பது அந்த சட்டத்தில் இல்லை.
அப்படி இருந்திருந்தால் நான்காண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் உயர்த்தாமல் இருந்தோம். மீண்டும் மீண்டும் மின்சாரத் துறை அமைச்சர் ஒரு தவறான கருத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா? படித்துள்ளீர்களா? படித்துப் பார்த்து தான் சொல்கிறீர்களா? இதுதொடர்பாக பதிலளிக்க சட்டப்பேரவை அல்லது வெளியே எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்.
அந்த திட்டத்தில் மின் கட்டண உயர்வு என்று எங்கு உள்ளது என்பதை காட்ட வேண்டும். உங்களுக்கு நிர்வாக திறமை இல்லாமல் மக்களை ஏமாற்றுவதற்காக, நீங்கள் கொள்ளையடிப்பதற்காக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். இது ஏற்கதக்கதல்ல. மக்கள் நம்ப மாட்டார்கள். இருந்தாலும் உதய் மின் திட்டம் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட திட்டம். எனினும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரு நிபந்தனைகளை விதித்ததால் தான் கையெழுத்திட்டோம். இவர்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு மாதிரியும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியும் பேசிக் கொண்டுள்ளனர்.
விவசாயத்திற்கு மின் மீட்டரை நாங்கள் எப்போதும் வைக்கவில்லை. ஆனால் அவர்கள் இப்போது வைத்துக் கொண்டுள்ளனர். விவசாய சங்கங்கள் இதுபற்றி கேட்பதில்லை. மக்கள் விரோதமாக இவர் செயல்பட்டுக் கொண்டு எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்வதை தவிர்க்க வேண்டும்” என்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், வி.சரோஜா, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.