சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்களை பாதிக்கும் புதிய பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவல் துறையினருக்கு திமுக அரசு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை அளிப்பதுபோல், கடந்த ஜூன் 13-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2-ம் நிலைக் காவலர்கள் 23 ஆண்டுகால பணிக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதல்நிலைக் காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டுள்ளது திமுக. இந்தப் புதிய உத்தரவால், சுமார் 35 ஆயிரம் காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும்.
மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மா விவசாயிகள்: இதேபோல் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட தமிழக ‘மா’ விவசாயிகளுக்காக பழனிசாமி தனது எக்ஸ்தள பக்கத்தில் விடுத்த கோரிக்கை: மா விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய் அதிமுக சார்பில் கடந்த ஜூன் 20-ம் தேதி கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் போராட்டம் நடத்தி, ‘மா’ விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. ஆனால், வழக்கம் போல இங்குள்ள திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கர்நாடக மாநில ‘மா’ விவசாயிகளுக்கு விலை பற்றாக்குறையை ஈடுசெய்யும் திட்டத்தின்படி இழப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்கிறேன். தமிழக விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும். அதிமுக என்றும் விவசாயிகளுடன் துணை நிற்கும். அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.