சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின் முதல் நாளில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததுடன், அனைவரும் இணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்கும்படி அறிவுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘ஜூன் முதல் வாரத்தி்ல் இருந்து, கழக நிர்வாகிகளை தொகுதிவாரியாக அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக ‘ஒன் டூ ஒன்’ பேசுவோம்’’ என்று அறிவித்தார்.
இதையடுத்து, ‘உடன்பிறப்பே வா’ என்று தலைப்பில் நிர்வாகிகள் சந்திப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில், சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களை முதல்வர் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இச் சந்திப்பின்போது, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தகவல் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆஸ்டின், தாயகம் கவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முதல்வரை நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சந்தித்து தங்கள் கருத்துகளைக் கூறினர். குறைகள், கருத்துகளை நேரடியாகக் கூற முடியாதவர்களுக்காக கருத்துப் பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி போட்டுவிட்டுச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுக்காக, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (சிதம்பரம்), லட்சுமணன் (விழுப்புரம்), மணிமாறன் (உசிலம்பட்டி) ஆகியோருடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். ஆனால், சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.
திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொருவரிடமும் முதல்வர் கேட்டறிந்தார். இதில், சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய இரு தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற்றவை. இந்த தொகுதிகளில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெறவேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது, நிர்வாகிகள், இந்தத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு இம்முறை ஒதுக்க வேண்டாம். திமுகவே போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர், ‘அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வதுடன், திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேணடும். திமுக மட்டுமின்றி கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று முதல்வர் அறிவுறுத்தியதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜூன் 17 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.