மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பேருந்தில் வருபவர்கள் மேலூர் பிரதான சாலையில் இறங்கி சுமார் அரை கி. மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் மாற்று திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதை தவிர்க்க பேட்டரி கார் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சம் செலவில் இரு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு காரில் ஓட்டுநர் உட்பட்ட 6 பேர் பயணம் செய்யலாம்.
பேட்டரி கார் சேவையை மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி எஸ். எம். சுப்புரமணியம் இன்று காலை தொடங்கி வைத்தார். கூடுதல் பதிவாளர் ஜெனரல் அப்துல் காதர், நிர்வாக பதிவாளர் பிரேம் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு பேட்டரி கார்களும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பிரதான வாயில் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும்.
இதை நீதிமன்றம் வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், உயர் நீதிமன்ற ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பேட்டரி கார்கள் உயர் நீதிமன்ற வேலை நாட்களில் பிரதான வாசலில் இருந்து காந்தி சிலை அருகே மத்திய தொழிலக பாதுகாப்பு வாயில் வரை இயக்கப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.