மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்னால் உள்ள கடற்கரையில் இன்று பலி பீடம் சிற்பம் கரை ஒதுங்கி உள்ளதாக, கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்ட நபர்கள் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் உள்ளிட்ட பல்வேறு புராதான சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை, தொல்லியல் துறை பராமரித்து, பாதுகாத்து வருகிறது. மேலும், புராதன சிற்பங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், தற்போது கடற்கரையில் உள்ள குடவரை கோயிலை போன்று, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேலும் சில கோயில்கள் இருந்ததாகவும். இக்கோயில்கள், நாளடைவில் கடல் சீற்றம் மற்றும் ஆழிபேரலையில் கடலில் மூழ்கியதாக பரவலான கருத்து இருந்து வருகிறது. இதை உறுதிப்படுத்துவது போல், கடந்த ஆகஸ்ட் மாதம் கடலில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, பழங்கால நகரம் இருந்ததற்கான கல் தூண்கள், மண்டபங்கள் போன்ற தொல்லியல் எச்சங்களை கண்டறிந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு விடுதியின் பின்னால் உள்ள கடற்கரையில் இன்று பலி பீடம் சிற்பம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை, கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்ட நபர்கள் கண்டறிந்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கடற்கரையில் ஒதுங்கி உள்ள பலி பீடம் சிற்பம் பழங்காலத்தை சார்ந்ததா அல்லது வேறு ஏதேனும் பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட பலி பீடமா? என தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.