சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப்போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார். திமுக கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினராக இன்று அவர் பதவியேற்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க மட்டும் வராமல், என்னை வாழ்த்தி அனுப்புவதற்கும் வந்திருப்பதாக நினைக்கிறேன்.
அதற்காக உங்களுக்கு நன்றி. மக்களின் வாழ்த்துகளுடன், நான் அங்கு உறுதிமொழி எடுத்து, எனது பெயரைப் பதிவு செய்ய டெல்லி செல்கிறேன். இந்தியனாக எனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் மரியாதையையும், கடமையையும் நான் செய்யப்போகிறேன். இதை பெருமையுடன் நான் சொல்லிக் கொள்கிறேன்.
எனது கன்னிப் பேச்சு, எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை, இப்போது இங்கு சொல்லக் கூடாது. சில விஷயங்கள் இங்கு பேசுவதுபோல் அங்கு பேசக்கூடாது. அதேபோல், அங்கு பேசுவதுபோல், இங்கு பேசக்கூடாது. எனது 6 ஆண்டுகால பயணத்தைக் கவனித்தால், நான் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இதற்கிடையே, டெல்லி நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் இன்று எம்.பி.யாக பதவியேற்கும் நிகழ்வை தொண்டர்களும், பொதுமக்களும் பெரிய திரையில் நேரலையில் காண்பதற்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.