சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 6) மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது வேட்புமனுவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மநீம துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, பொதுச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.