சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிஐடியு குற்றஞ்சாட்டியுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயோமெட்ரிக் மூலம் தொழிலாளர்கள் வருகை முறையாக பதிவு செய்யப்படவில்லை.
இதனால் 750-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விடுப்பு கழிக்கப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதைக் கண்டித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) சங்கத்தினர், மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியதாவது: 750-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு 20 நாட்கள் வரை வருகைப் பதிவு வழங்காமல், விடுப்பில் கழித்து சம்பளம் போடப்பட்டுள்ளது. அலுவலகப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயோமெட்ரிக் மட்டுமின்றி, வருகைப் பதிவை ஏடு மூலமாகவும் பராமரிக்க வேண்டும்.
இதற்கிடையே, மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர், தனக்கு தொந்தரவு இருப்பதாக புகாரளித்துள்ளார். பின்னர் புகாரளித்த பெண் ஊழியரே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் வருகைப் பதிவு வழங்கப்படவில்லை. இவ்வாறு பெண் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
மற்றொரு பெண் ஊழியர் பணியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரையும் ரகசியமாக வைக்காமல், விசாரணைக் குழு வெளியிட்டுள்ளது. இங்குள்ள பெண்கள் மன அழுத்தத்தில் பணிபுரியும் சூழல் இருக்கிறது. இது தொடர்பாக அரசு தலையிட்டு, விசாரணை நடத்த மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் துரை, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநிலக் குழு உறுப்பினர் மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.