சென்னை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகளை மேயர் ஆர்.பிரியா நேற்று வழங்கினார். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் உடல் வலிமையுடனும், மனத்திடத்துடனும், அறிவு வளத்துடனும், சமுதாய நோக்குடனும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்கள் 75 நிமிடங்கள், திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக, தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. முதல்கட்டமாக 29 மாநகராட்சி பள்ளிகளில் 1,500 மாணவிகளுக்கு, அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் புதிதாக 20 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளிக்கு தலா 50 மாணவிகள் என 1,000 மாணவிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் என வாரத்துக்கு 3 நாட்கள், மாதத்துக்கு 12 நாட்கள் வீதம் 4 மாதங்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு கராத்தே சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, புளியந்தோப்பு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையர் (கல்வி) ஜெ.விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.