சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் உபகரணங்கள் சரிபார்ப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன் னிட்டு, மழைக் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள ஜேசிபி உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை சரிபார்த்து தயார்படுத்தும் பணிகள், அனைத்து மண்டலங்களிலும் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் உரிய பொறுப்பு அலுவலர்களின் வாயிலாக கண்காணிக்கப்பட்டது.
மோட்டார் பம்புகள்: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மோட்டார் பம்புகளுடன் கூடிய டிராக்டர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்துக்கு வந்துள்ள நிலையில், அவற்றை தயார்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளசரவாக்கம் மண்டலத்தில் நடைபெற்ற சரிபார்க்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை அகற்றும் பணிக்காக, மாநகராட்சியில் 50 எச்பி திறன் வரையிலான 594 மோட்டார் பம்புகள், 192 நீர்மூழ்கி பம்புகள், 500 டிராக்டர் பம்புகள், 100 எச்பி திறன் கொண்ட 150 டீசல் பம்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டுக்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
478 வாகனங்கள்: அத்துடன், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், கையினால் இயக்கப்படும் 224 மரக்கிளை அகற்றும் இயந்திரங்கள், மரக்கிளை அகற்றும் 52 டெலஸ்கோபிக் இயந்திரங்கள், கிரேன் பொருத்தப்பட்ட 5 வாகனங்கள், 7 ஜேசிபி வாகனங்கள், 60 பாப்காட் வாகனங்கள், 93 டிப்பர் லாரிகள், 1 டெலிஹேண்ட்லர் வாகனம் என, மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.