சென்னை: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கல்வித்துறை சீரழிந்துள்ளது என்றும், மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகளுக்கு அரசு தான் காரணம் என்றும் தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகள் இந்தாண்டு மட்டும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பல குற்றங்கள் வெளிவந்திருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.
ஆசிரியர்கள் வெறும் பாடத்தை போதிப்பவர்கள் மட்டும் அல்லர். ஒழுக்கத்தை, கண்ணியத்தை, நன்னடத்தையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே ஒழுக்கமின்மையாக, கண்ணியமற்று நடந்து கொள்வதற்கு காரணம் ஒழுக்க கேடான, தகுதியற்ற நியமனங்கள் தான்.
இதற்கு முழு காரணம் அரசு தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. லஞ்சமும், ஊழலும் தாண்டவமாடும் கல்வித்துறையில் ஒழுக்கமான, கண்ணியமான நியமனங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சீரழிந்து போயிருக்கிறது கல்வித்துறை. தனியார் கல்வி நிலையங்களில் நிர்வாகம் திறம்பட இருப்பதால் இது போன்ற புகார்கள் பெருமளவில் எழுவதில்லை.
அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஏழைகள் தானே என்று அலட்சியம் காட்டுவது தான் அரசு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணம். கல்வியை வியாபாரமாக்கியவர்கள், அரசு பள்ளி ஆசிரியர் பணியை காசுக்கு விற்க தொடங்கியதோடு, ஏழை மக்களை நட்டாற்றில் விட்டு விட்ட கொடூரம் தான் தமிழகத்தில் ஏழை அரசு பள்ளி மாணவிகளின் நிலைக்கு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.