சென்னை: அயனாவரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரனின் பேரன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரம் சுரேஷ் என்பவரது மகன் நிதின்சாய் (19). மயிலாப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 29 அன்று தனது கல்லூரி நண்பர்களுடன் அண்ணாநகரில் உணவருந்தச் சென்றார்.
காதல் பிரச்சினை: இதற்கிடையே நிதின்சாயும், அவரது நண்பர் அபிஷேக்கும் சென்ற இருசக்கர வாகனம் மீது காரை மோதியதில், நிதின்சாய் படுகாயமடைந்து இறந்தார். அபிஷேக் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். காதல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிதின்சாயை கொலை செய்ததாக கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த திமுக மாநகராட்சி கவுன்சிலரான தனசேகரனின் பேரனான சந்துரு, அவரது நண்பர் பிரணவ் உள்ளிட்டோரை திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சந்துரு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.
அரசு தரப்பு ஆட்சேபம்: அப்போது மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என மாநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.