திருவாரூர்: ‘மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மனித குலத்தின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும்’ என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், தமிழக அமைச்சர்கள் கோவி.செழியன், கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவில், முதன்மை மாணவர்களாகத் திகழ்ந்த 45 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தங்கப்பதக்கங்களை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், சமூகக் கல்லூரி அம்பேத்கர் மையம் மூலம் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்கு பங்களித்து வருகிறது. இங்கு பயிலும் 3 ஆயிரம் பேரில் அதிக அளவு மாணவிகள் இருப்பதும், தங்கப்பதக்கம் பெற்றவர்களில் 3-ல் 2 பங்கு பேர் மாணவிகளாக இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் கற்கும் கல்வி, சமூகத்துக்குப் பயனளிப்பதாக இருக்க வேண்டும். எனவே, மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை, அறிவியல் தொழில்நுட்பத்துக்கும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மனித குலத்தின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும்.
வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி கற்க பல்வேறு வழிவகைகள் இருக்கின்றன. நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்வது நிகழ்கால தலைமுறைக்கு எளிமையாக உள்ளது. இதைத்தான் தேசிய கல்விக்கொள்கை மையமாகக் கொண்டுள்ளது.
20 ஆண்டுகளில் இணைய புரட்சி பல்வேறு தொழில்களை உருவாக்கியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மற்றும் தொழில் புரட்சி 4.0 ஆகியவை நமது வேலை மற்றும் பயன்பாட்டில் மேலும் அதிக மாற்றங்களைக் கொண்டு வரும். இத்தகைய சூழலில் புதிய திறன்களை கற்றுக்கொண்டு தங்களை தகவமைத்துக் கொண்டால் மாற்றத்தின் தலைவர்களாக உருவாக முடியும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து விழாவில், 568 மாணவிகள், 442 மாணவர்கள் என 1,010 பேர் பட்டம் பெற்றனர்.
ஸ்ரீரங்கத்தில் தரிசனம்: பின்னர், திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்து காரில் திருச்சி விமான நிலையம் சென்ற அவர், தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.