மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியர் நியமிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் நியமனம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2021-ம் ஆண்டு செப். 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பயோகெமிஸ்ட்ரி பாட ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த இந்திரா என்பவர், தேர்வு நடைமுறைகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றபோதும், இறுதி அறிவிப்பாணையில் அவர் விண்ணப்பித்த பதவி இடம்பெறவில்லை. இதையடுத்து, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திரா வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, பயோ கெமிஸ்ட்ரி பாடத்துக்கு மாணவர்கள் இல்லாததால் இந்த பாடத்துக்கான ஆசிரியர் பணியிடம் நீக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பாடம் நடத்துவதற்கு மாணவர்கள் இருக்க வேண்டும். காலி இருக்கைகளுக்கு மனுதாரர் பாடம் நடத்த முடியாது. எனவே, மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியர் நியமிக்கும்படி உத்தரவிட முடியாது என்பதால் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என குறிப்பிட்டுள்ளனர்.