சென்னை: தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.
நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முன்னிலை வகித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவை வழங்கி, இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இரு மாநில முதல்வர்களும் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: `காலை உணவுத் திட்டத்தை திமுக அரசு 2022-ம் ஆண்டு செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். முதல்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்தனர். 2023-ம் ஆண்டு ஆக. 25-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்தோம். 2024-ம் ஆண்டு காமராஜர் பிறந்த நாளில், ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில் செயல்படும் 2,429 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறோம். இதனால் கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இனி தமிழகத்தில் செயல்படும் 37,416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20.59 லட்சம் மாணவ, மாணவிகள் தினமும் காலையில் சூடாக, சுவையாக, சத்தாக சாப்பிட்டு, வகுப்பறைக்குள் தெம்பாக நுழைவார்கள்.
காலை உணவு திட்டத்தால், குழந்தைகளின் உடல்நலம் மேம்பட்டுள்ளது. கற்றல் திறன் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது குறைந்துள்ளது. பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்திலும்… பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது: காலை உணவுத் திட்டத்தால் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவு மட்டும் அளிக்கவில்லை. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதன் மூலம் கற்கும் திறனை அதிகரிக்கச் செய்துள்ளார். இத்திட்டம் குழந்தைகளுக்கான திட்டம் மட்டும் அல்ல, நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டம். உண்மையில் இது மிகப்பெரிய சாதனை. இத்திட்டம் பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் முன்மாதிரி திட்டமாக திகழ்கிறது. இந்த சிறப்பான காலை உணவுத் திட்டத்தை எங்கள் அமைச்சரவையில் விவாதித்து, பஞ்சாப் மாநிலத்திலும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, “பள்ளிகளில் குழந்தைகளை படிக்கவைத்தால் மட்டும் போதாது, விளையாடவும் ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் உடல் நலம் மட்டுமல்லாது, மனநலமும் மேம்பட்டுள்ளது” என்றார். இந்நிகழ்ச்சியில், பஞ்சாப் மாநில முதல்வரின் மனைவி குர்பிரித் கவுர், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மயிலை வேலு எம்எல்ஏ, மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சமூகநலத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பள்ளி தலைமை ஆசிரியை ஜெரினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சவுமியா சுவாமிநாதன் யோசனை: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சவுமியா சுவாமிநாதன் பேசும்போது, “குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கைக்கீரை பொடி தினமும் 5 கிராம் சேர்க்க வேண்டும். இந்த உணவை மகளிர் குழு மூலமாக தயாரிக்கலாம். இதில் புரதம், கால்சியம், வைட்டமின், மினரல் உள்ளிட்ட சத்துகள் இடம் பெற்றுள்ளன. இதை உண்பதன் மூலம் குழந்தைகளுக்கு ரத்த சோகை நீங்கி, ஆரோக்கியம் மேம்படும்” என்றார். இத்திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது சென்னை மாநகர பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. திட்டத்தை விரிவாக்கம் செய்தமைக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு, பள்ளிக் குழுந்தைகளின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.