சென்னை: சென்னையில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த இறப்புக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 8, வார்டு 106-க்கு உட்பட்ட வீரபாண்டி நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் சரியாக மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த தீபா (42) என்ற பெண் எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்து இறந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அவர் பள்ளத்தில் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை.
நேற்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து, தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் கயிறு கட்டி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் அடிபட்டும், பள்ளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் யாராவது கொலை செய்து பள்ளத்தில் வீசினார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பெண்ணின் இறப்புக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என குற்றஞ்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.