சென்னை: மழைநீர் வடிகால் பணிக்காக மண்தோண்டப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், பொதுமக்களின்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மண் தோண்டப்பட்ட இடங்களில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி முறையான தடுப்புகள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநகராட்சியின் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பணி நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், மண் தோண்டப்பட்டு மழைநீர் வடிகால் பணிகள் மேற் கொள்ளப்படும் இடங்களில் உரிய பாதுகாப்பு தடுப்புகள் இல்லாமல் இருந்தால் சென்னை மாநகராட்சியின் புகார் தொலைபேசி எண் 1913-ல் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.