காஞ்சிபுரம்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கொடி மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் நவ. 20-ம் தேதி பெயர் அறிவிக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கராத்தே எம்.பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மதிமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத் உட்பட செவ்வந்தியப்பன், வல்லம் பஷீர், வாசுகி பெரியார்தாசன் என முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பலர் மதிமுகவையும், அதன் பொதுச் செயலர் வைகோ, முதன்மைச் செயலர் துரை வைகோ ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலர் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தக் கட்சியில் தியாகம் செய்தவர்கள் பலர் தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்றும், மகனுக்காக தற்போது கட்சி நடைபெறுகிறது என்றும் வரலாறு ஒருபோதும் வைகோவை மன்னிக்காது என்றும் இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா உள்ளிட்டோர் குற்றம் சாட்டிப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் அமைப்பின் பெயர் குறித்தும், இது அரசியல் கட்சியா? அமைப்பா? என்பது குறித்தும் முடிவு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைப்புக்கான கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் 9 நட்சத்திரங்கள் கொண்ட கருப்பு, சிவப்பு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு பகுதியில் நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பலருக்கு அண்ணா சிலையுடன் கூடிய நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த நினைவுப் பரிசில் திராவிடக் குடியரசு விடுதலைக் கழகம் என்றும் பெயர் இடம் பெற்றுள்ளது. புதிய அமைப்பை அரசியல் கட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பலர் இந்த மாநாட்டில் வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் 10 பேருக்கு திராவிட ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு நவ.20-ல் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.