சென்னை: கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம், மலைப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது உட்பட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றும் அரசே திமுக அரசு. சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி-ஒளி காட்சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராஜர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தை வரும் 19-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 11.19 சதவீதமாக அதிகரித்து, பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, கூறியிருந்த, 9.69 சதவீத்தை விட இது சுமார் 1.5 சதவீதம் அதிகம். இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் திகழ்கிறது.
சுதந்திர தினத்தில் 9 அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, சிவகங்கை மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெறும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.14,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக, சென்னை மாதவரத்தில் 33,000 சதுரஅடி பரப்பளவில் உட்கட்ட மைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி ரூ.22 கோடியில் கட்டப்படும். தமிழகத்தின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்துக்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
தமிழக கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற நவீன தொழில்நுட்பங்களில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இந்த 9 அறிவிப்புகள் விரைவில் செயல்படுத்தப்படும்.
பல மாநிலங்கள், மொழிகள், பண்பாடுகள், மதங்களைச் சார்ந்த கோடிக்கணக்கான மக்கள், அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, அனைவரும் இந்தியராக ஒருங்கிணைந்து செயல்பட நமது அரசியல் அமைப்பு சட்டமே காரணம். இதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மக்கள் பணியாற்றத் தேவையான அதிகாரப் பகிர்வு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுத்திட, அரசியல் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதே ஒரே தீர்வு. இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தருணம் தற்போது வந்துவிட்டது. இவ்வாறு முதல்வர் பேசினார்.