ஈரோடு: ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மலைப்பகுதி பெண்களை சென்றடையாத நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தைப் பின்பற்றி, ஈரோடு மலைக் கிராமங்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளில், பெண்கள் கட்டண மில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் (விடியல் பயணம்) மூலம், ரோஸ் வண்ணம் பூசப்பட்ட அரசு நகரப் பேருந்துகளில், பெண்கள் கட்டணமின்றி (இலவசமாக) பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
700 கோடி முறை பயணம்: கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம், கடந்த மே மாதம் வரை, மாநிலம் முழுவதும், 7,671 பேருந்துகளில், 700 கோடி முறை பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொண்டுள்ளனர். நகரப்பகுதிகளில் பணிக்கு செல்வோர், மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பணிக்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கொடுமுடி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, நம்பியூர், தாளவாடி ஆகிய நகர பணிமனைகள் மூலம், 304 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும், இத்தகைய சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட நகரப் பேருந்துகளில், நாள் தோறும் 3 லட்சம் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.
பாரபட்ச நடவடிக்கை: மாநிலம் முழுவதும் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில், கட்டணமில்லாத பயணம் மேற்கொள்ள பெண்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் அதிகம் வாழும் மலைப்பகுதிகளில் நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், இங்கு வசிக்கும் பெண்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வசிக்கும் அனைத்து பெண்களின் நலனுக்காக தீட்டப்பட்ட ஒரு திட்டம், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செயல்படவில்லை என்பது பாரபட்சமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, பர்கூர், கடம்பூர் மலைப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.மோகன்குமார் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 118 குக்கிராமங்களில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நூறுநாள் வேலைத்திட்டப் பணிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவத் தேவைகள் ஆகியவற்றுக்கு, மலைப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பெண்கள் வர வேண்டியுள்ளது. மலைப்பகுதிகளில் புறநகர் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் நிலையில், அவர்கள் கட்டணம் செலுத்தியே பயணிக்க வேண்டியுள்ளது.
நகர பேருந்துகள் இல்லை: மேலும், சமவெளிப்பகுதியோடு ஒப்பிடுகையில், மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள், குறிப்பாக பெண்களின் வருவாய் மிகக்குறைவாகவே இருந்து வருகிறது. எனவே, தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் இவர்களுக்கு அவசியமாக உள்ளது.
எங்களது தொடர் கோரிக்கைக்குப் பிறகு, தாளவாடியில் இரு வழித்தடங்களில் இயங்கும் நகர பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள தற்போது அனுமதிக்கப்படுகிறது. தாளவாடியில் இதர வழித்தடங்கள் மற்றும் கடம்பூர், பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நகர பேருந்துகளே இல்லை என்பதால், இப்பகுதி பெண்களுக்கு கட்டணமில்லா பயண வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை தேவை: இந்த திட்டத்துக்காக மலைப்பகுதிகளில் நகர பேருந்துகளை தனியாக இயக்க சாத்தியமில்லை என்பதால், அரசு மாற்றுவழியை பின்பற்றலாம். இதன்படி, மலைப்பகுதியில் இயங்கும் புறநகர் பகுதிகளில், மலைப்பகுதி இடங்களுக்குள் பெண்களை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கலாம். உதாரணமாக, தாளவாடி அருகில் உள்ள பைனாபுரத்தில் இருந்து தாளவாடி வர பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதிக்கலாம். அவர்களே சத்தியமங்கலம் போன்ற சமவெளிப் பகுதிக்கு பயணித்தால் கட்டணம் வசூலிக்கும் முறையை அரசு பின்பற்றலாம். இதே நடைமுறையை கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளிலும் பின்பற்றலாம்.
மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பலன் தரும் இலவச பயண திட்டம், மலைப்பகுதியில் வசிக்கிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, மறுக்கப்படக் கூடாது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மலைப்பகுதி பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நீலகிரியை பின்பற்றலாமே! – முழுவதும் மலைப்பகுதியாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பலன் பெறும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தின் கிராமப்பகுதிகளுக்கு, நகரப்பேருந்து அல்லாத, புறநகர் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் இந்த நடைமுறையைப் பின்பற்றி, விதிமுறைகளைத் தளர்த்தி, மலைக்கிராம பெண்களும் விடியல் பயணத்தில் பங்கேற்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யுமா?