மலேசியாவில் பேரா மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் சிவனேசன் சுற்றுலா தளமான மாமல்லபுரத்துக்கு நேற்று வருகை தந்தார். முன்னதாக, அவரை மல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, மல்லை தமிழச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மல்லை சத்யா தலைமையில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி முன்னிலையில், தமிழக கலாச்சரப்படி பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை மலேசியா நாட்டின் பேரா மாநில அமைச்சர் சிவனேசன் சுற்றி பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தார். அவருடன், மல்லை தமிழ்ச் சங்க செயலாளர் பாஸ்கரன், விசிக மாவட்ட செயலாளர் கனல் விழி, திருக்கழுகுன்றம் விசிக ஒன்றிய செயலாளர் அன்பு, விசி க நகர செயலாளர் ஐயப்பன், பிரபல சமூக ஆர்வலர்கள் குங்பூ மாஸ்டர் அசோக், பாபு, சுரேந்தர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பேராவில் 134 தமிழ் பள்ளிகள்: அப்போது, மலேசியா நாட்டு பேரா மாநில அமைச்சர் சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நான் மலேசியா சென்று பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், தமிழை இதுவரை மறக்கவில்லை. எங்கள் மதத்தையும் மறக்கவில்லை. மலேசிய அரசியலில் தமிழுக்கும், மதத்துக்கும் நிறைய சட்ட ஈடுபாடு உள்ளது. அதனை அழிப்பது மிகமிக சிரமம். தமிழ்நாட்டை அடுத்து நிறைய தமிழ் பள்ளிகள் அதிகம் உள்ள நாடு மலேசியா தான்.
குறிப்பாக, மலேசியாவில் பேரா மாநிலத்தில் மட்டும் 134 தமிழ் பள்ளிகள் உள்ளன. இது, எங்களுக்கு பெருமையாக உள்ளது. எப்போதுமே, தமிழ் அழியாது. இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் நிறைய பேர் மலேசியா வந்தார்கள். இப்போது, பொருளாதாரம் நன்றாக உள்ளதால் தொழிலாளர்கள் வருவது குறைவாக உள்ளது. குறிப்பாக, தொழிலாளர்கள் கடத்தல் (மலேசியாவுக்கு) இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த, வாரம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 42 தொழிலாளர்களை மீட்டுள்ளார்கள். போதை பொருள் கடத்தல்காரர்களையும் பிடித்து வருகிறார்கள். போதை பொருள் என்று பிடிபட்டால் மலேசியாவில் தூக்கு தண்டனை தான். 26 பேர் போதை பொருள் கடத்தல் பிரச்சினையில் சிக்கி உள்ளனர். அவர்களின், மேல்முறையீடு எல்லாம் முடிந்து விட்டது. அவர்களை, காப்பாற்ற புதிதாக சட்டம் கொண்டு வந்துள்ளோம்.
நீதிபதிக்கு தூக்கு தண்டனை தவிர வேறு வழி இல்லாமல் இருந்தது. 34 பி போதைப்பொருள் சட்டம் என்றால் தூக்கு தண்டனை தான். ஆனால், இப்போது மலேசியா நாடாளுமன்றத்தில் சட்டம் மாற்றம் செய்து நீதிபதியிடம் ஒப்படைத்து விட்டார்கள். அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை கொடுக்கலாம் என அந்த அதிகாரத்தை, உரிமையை நீதிபதியிடம் கொடுத்துள்ளார்கள். இப்போது, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறார்கள். இவ்வாறு, மலேசியா நாட்டு அமைச்சர் சிவநேசன் கூறினார்.