சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன். இவர் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.
இவர், 1996-ம் ஆண்டு அதிமுகஆட்சியில், தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் (டாமின்) தலைவராக இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சட்ட விரோதமாக சொத்துகளை வாங்கி குவித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 1991 முதல் 1996 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.34 கோடி சொத்துகள் குவித்தது கண்டறியப்பட்டது. சிபிஐ விசாரணையை அடிப்படையாக கொண்டு, கடந்த 2017-ம் ஆண்டு அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
தியானேஸ்வரன் பதவியில் இருந்த காலத்தில், ஷில்பி கிரி கன்ஷ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நமச்சிவாயம் அறக்கட்டளை பெயரில், அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கி இருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தியானேஸ்வரன் காலமானார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, ரூ.1.19 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வுசெய்து, தியானேஸ்வரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ரூ.1.7 கோடி மதிப்பிலான 16 அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.86.24 லட்சம் பணம் என மொத்தம் ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி அறிவித்துள்ளது.