சென்னை: சென்னை: தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடியில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. முதலில் அடித்தளம் அமைக்கும் பணி முடிந்தது.
இதையடுத்து, காந்தி இர்வின் சாலை பக்கத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையில், ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை அனைத்தையும் இணைக்கும் விதமாக, நடைமேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்ப பணி தொடங்கியுள்ளது. இதற்காக, ரயில் நிலையத்தின் முதல், 2-வது நடைமேடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. அடுத்த 15 நாட்களுக்கு பிறகு 3, 4 வது நடைமேடைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையத்தின் நடைமேடைகளை இணைக்கும் வகையில், ஒரு பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 1,2 ஆகிய நடைமேடைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, வந்தடையும் வகையில் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர படிப்படியாக ரயில் நடைமேடைகள் மூடப்பட உள்ளன. நடைமேடைகள் மூடப்படவுள்ளதால், சுமார் 10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.