சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் 27 காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இப்பதவிக்கு சித்த மருத்துவத்தில் பட்டம் (பிஎஸ்எம்எஸ்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு மத்திய இந்திய மருத்துவ வாரியத்தில் அல்லது தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 37. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 29-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். போட்டித் தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீட்டு வாரியாக காலியிடங்கள், தேர்வுமுறை, தேர்வு கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம். பணிக்கு தேர்வு செய்யப் படுவோர் பணிநியமன ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்துக்குள் பணியில் சேர வேண்டும். மேற்படிப்பு உள்ளிட்ட இதர காரணங்களைக் கூறி காலஅவகாசம் கேட்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.