சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில், முதல்வர் பதவிக்கான முறையான பதவி உயர்வு பட்டியல் தயாரித்து 4 வாரங்களில் தகுதியானவர்களை முதல்வர்களாக நியமிக்க தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத் துறையில் அரசு உதவி மருத்துவராக பணியில் சேரும் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக இணை பேராசிரியராகவும், அதன்பிறகு 3 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் 4 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருந்தால் பேராசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பேராசிரியராக 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் அடுத்தக்கட்டமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக (டீன்) சிவில் மருத்துவ பட்டியலின்
பதவி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2024-25 ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் 26 பேராசிரியர்களுக்கு முதல்வராக பதவி உயர்வு வழங்க கடந்தாண்டு அக்.1-ம் தேதியன்று அறிவிப்பாணை வெளியிட்ட தமிழக அரசு, இதுதொடர்பாக, ஆட்சேபங்களை தெரிவிக்க 2 மாதம் அவகாசம் இருந்தும், அக்.3-ம் தேதியன்று, அதில் 14 பேருக்கு அரசு மருத்துவமனைகளின் முதல்வராக பதவி உயர்வு வழங்கி அரசாணை பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இணைப் பேராசிரியர்களாக இருந்த மனுதாரர்களுக்கு, பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட போதிலும், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி பதவி உயர்வுக்கான நியமன உத்தரவு தாமதமாக வழங்கப்பட்டதற்கு மனுதாரர்களை குறைகூற முடியாது. ஏற்கெனவே, பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு தான் நடைபெற்றுள்ளது.
எனவே, விதிகளுக்கு புறம்பாக 14 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்களாக பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனம் செல்லாது என்பதால் அதை ரத்து செய்தும், பணிமூப்பு அடிப்படையில் முறையான பட்டியல் தயாரி்த்து தகுதியானவர்களுக்கு 4 வாரங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, ஏற்கனவே பதவி உயர்வு பெற்ற அரசு மருத்துவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு வழக்கின் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் அவினாஷ் வாத்வானி, எஸ். தரன் ஆகியோரும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், காட்சன் சுவாமிநாதன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்களாகப் பதவி உயர்வு தொடர்பாக ஆட்சேபங்களை தெரிவிக்க 2 மாதம் அவகாசம் உள்ள நிலையில், அரசு அவசர கதியில் 2 நாட்களில் முதல்வராக நியமித்து பதவி உயர்வு வழங்கியிருப்பது சட்டவிரோதமானது.
எனவே, 14 மருத்துவ கல்லூரி முதல்வர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்பதால் இந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், தனி நீதிபதியி்ன் உத்தரவுப்படி 4 வார காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர் பதவிக்கான பதவி உயர்வு பட்டியலை முறையாக தயாரித்து, தகுதியானவர்களை முதல்வர்களாக நியமிக்க வேண்டும், என அரசுக்கு உத்தரவிட்டனர்.