சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற ‘மருத்துவர் தினம் 2025’ நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையில் மகத்தான பணியாற்றிய 50 மருத்துவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் நாகநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் எம்.விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பி.உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 2 கோடியே 28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்துக்காக ஐநாவால் தமிழக சுகாதாரத் துறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2024-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட ‘இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48’ திட்டம் சாலையில் விபத்துக்குள்ளானவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் ரூ.1 லட்சம் உதவித் தொகை தந்து உயிர்களைக் காப்பாற்றுகின்ற சிறந்த திட்டமாகும்.
இத்திட்டத்தில் உதவித் தொகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உயிர் பெற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுபோல பல்வேறு சிறப்புக்குரிய திட்டங்கள் தமிழக சுகாதாரத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மருத்துவத்துக்காக உலக அளவிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 25 சதவீதம் பேர் மருத்துவத்துக்காக வருகின்றனர்.
தமிழகத்தில் 19 புதிய மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகள், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் என மொத்தம் 25 இடங்களில் சுமார் ரூ.1,018 கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டமைப்பு பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை ஜூலை 3-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். அன்றைய தினமே 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் திறக்கவுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.