சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்காமல் மருத்துவர்களின் வாழ்வாதாரத்தில் தமிழக அரசு விளையாடி வருகிறது என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சுமார் 14 லட்சம் ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவர்களும், 7.5 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கைப்படி ஒரு நாட்டில் உள்ள மக்களில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பது அடிப்படை. இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு (11,000) இளங்கலை மருத்துவப் படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்களுக்கு மிக குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. மேலும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தொகை-மருத்துவர் சராசரி தமிழகத்தில் அதிகமாகி வருவதால் இனி தமிழகத்துக்கான மருத்துவ இடங்களை குறைக்கலாமா அல்லது புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தலாமா என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் சிந்தித்த போது, தமிழகத்தின் சில அரசியல் வாதிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
வெற்று கோஷத்தை முன்வைத்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், பல கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் கொடூரமான உண்மை. புதிய தொழில் நுட்பங்கள், மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க முனையாமல் மருத்துவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது மாநில அரசு” என்று நாராயணன் திருப்பதி கூறப்பட்டுள்ளது.