சென்னை: மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி ஈட்டிய விடுப்பு வழங்க மறுப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி, அனைத்து மாவட்ட நலப்பணிகள் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் நலப்பணிகள் இணை இயக்குநர்கள், மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (குடும்ப நலம்) மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (காச நோய் மற்றும் தொழுநோய்), முதன்மை குடிமை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை குடிமை மருத்துவர்கள் சொந்த வேலை காரணமாக ஈட்டிய விடுப்பு முன்னனுமதி கோரும் விண்ணப்பங்கள் தற்சமயம் அதிகமாக வரப்பெறுகின்றன.
தற்சமயம் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக விடுப்பு கோரும் மருத்துவர்களுக்கு விடுப்பு வழங்கினால் பொது மக்களுக்கு தங்குதடையின்றி சிகிச்சை வழங்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவர்கள் பற்றாக்குறை சீரடையும் வரை ஈட்டிய விடுப்பு முன்அனுமதி வழங்க இயலா சூழ்நிலை உள்ளது. ஈட்டிய விடுப்பு கோரும் விண்ணப்பங்களை இவ்வியக்ககத்துக்கு பரிந்துரைத்து அனுப்புவதை தவிர்க்குமாறும், தங்கள் அளவிலேயே விடுப்பு விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட நலப்பணிகள் இயக்குநர்கள் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் பற்றாக்குறை நீடிப்பதால், மருத்துவர்களுக்கு விடுப்பு வழங்க முடியாது என தெரிவித்துள்ளதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:
மனிதநேயமற்ற முறையில் இந்த அறிக்கை வெளியிட்டதை கண்டிக்கிறோம். இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்போது மருத்துவர்கள் பற்றாக்குறையே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் திரும்ப, திரும்ப கூறி வருகிறார். இந்த நிலையில் டிஎம்ஸ் அறிக்கையின் மூலம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என்பது வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல மருத்துவ பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என அரசை கோரி வருகிறோம். ஆனால் இருக்கிற காலிப்பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது ஏன் என்பது குறித்து அரசு சிந்திக்கவில்லை. கூடுதல் பணிச்சுமை, மிக குறைவான ஊதியம், பல்வேறு நெருக்கடிகள் என்ற நிலையில் அரசு பணியை தொடர முடியாமல் மருத்துவர்கள் விலகி விடுகின்றனர்.
பணிச்சுமை அதிகரித்துள்ள போதிலும், அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாத வகையில் பணியாற்றி வருகிறோம். மருத்துவர்கள் பற்றாக்குறை நீடிப்பது அரசின் தவறு. அப்படியிருக்க மிகுந்த வேலைப்பளுவுடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு, ஈட்டிய விடுப்புக்கான அனுமதி மறுக்கப்படுவது மிகப்பெரிய அநீதி. மருத்துவர்கள் பற்றாக்குறை சீரடையும் வரை விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கெனவே கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, வருகின்ற ஜூன் 11-ம் தேதி மேட்டூரில் இருந்து பாதயாத்திரை தொடங்க இருக்கிறோம். இதன் தாக்கம் நிச்சயம் பாதயாத்திரையில் தெரியவரும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி அதன்படி, அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றி, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு அரசு அரசு வேலைக்கான ஆணையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.