சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் (86) இதய பிரச்சினைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையில் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது, ‘மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனக்கு ஓய்வே கிடையாது” என்றார் ராமதாஸ்.
இதனிடையே, பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருதய சம்பந்தமாக பிரச்சினைக்கு ஆஞ்சியோகிராம் செய்த சிறப்பு மருத்துவர்கள் எவ்வித பிரச்சனையும் இல்லை ரத்த ஓட்டம் சீராக உள்ளது இதயம் நன்கு செயல்படுகிறது என்று பரிசோதனை முடிவினை தெரிவித்துள்ளனர். இந்த நல்ல செய்தி எல்லோருக்கும் மிகவும் ஆறுதலாக உள்ளது’ என்று குறிப்பிட்டு, ராமதாஸை நலம் விசாரித்தோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு பாஜக தேசிய துணை தலைவரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பைஜெயந்த் பாண்டா, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும், இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இதனிடையே, இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் செல்போன் மூலம் ராமதாஸை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.