சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை – தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சமாளித்துக் கொண்ட முதல்வர், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. திமுகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்றார்.
இந்நிலையில், தலைசுற்றல் தொடர்ந்து இருந்து வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அதோடு, முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.