2026 தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் படு வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தேர்தல் வியூகங்களால் பேர வலிமையை அதிகமாக்க முடியுமா என ஒவ்வொரு கட்சியும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் சமயத்தில், சீமான் ஆடு மாடுகள், மரங்களுக்காக மாநாடு போட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு நாதகவின் வியூகம்தான் என்ன?
கட்சி தொடங்கியது முதல் இப்போதுவரை சீமான் இரண்டு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். ஒன்று தமிழ்த் தேசியம், மற்றொன்று தனித்துப் போட்டி. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 1.1 சதவீத வாக்குகளுடன் தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் பயணம், 2024 மக்களவைத் தேர்தலில் 8.2 சதவீதம் ஆனது. இதனால் இப்போது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகவும் மாறியுள்ளது நாதக.
தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு சதவீத அடிப்படையில் வளர்ச்சியைக் கண்டாலும், இதுவரை ஒரு தொகுதியில் கூட நாதக வென்றதில்லை என்ற விமர்சனங்களும் அதிகமாகி உள்ளது. ஆனாலும் கூட, சமசரமும் இல்லை, கூட்டணியும் இல்லை என 2026 தேர்தலுக்கு சுமார் 100 வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் சீமான்.
தொடக்கத்தில் விஜய்யோடு கூட்டணி வைக்கும் எண்ணத்தோடு பேசி வந்த சீமான், பெரியார் விவகாரத்தால் தவெகவை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். இப்போது இணையத்தில் நாதக, தவெகவினர் இடையேயான யுத்தம் சூடு பறக்கிறது. இப்படி அரசியல் களமே அனல் பறக்கும் வேளையில்தான், தனி ரூட்டில் ஆடு மாடுகள், மரங்கள், மலைகள், தண்ணீருக்கு மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறார் சீமான்.
சீமானின் வியூகம் என்ன? – தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் சீமானின் வாக்கு வங்கி தனித்துவமானது. ஏனென்றால், சீமான் பிரபல நடிகரும் அல்ல, பெரிய அரசியல் பின்புலம் கொண்டவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் தேர்தல் செலவுகளுக்கு கூட அவர்களிடம் பெரிதாக நிதியில்லை. இருப்பினும் 8.2 சதவீத வாக்குகள், அதாவது சுமார் 36 லட்சம் பேர் சீமானுக்கு வாக்களித்துள்ளனர்.
சீமானின் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இளையோர். அதேபோல, தமிழ்த் தேசியம், சுற்றுச்சூழல், இயற்கை, தமிழர் தொன்மம் எனும் கொள்கை கொண்டோர் நாதகவில் அதிகம் உள்ளனர். இவர்கள்தான் அக்கட்சியின் நிலைத்த வாக்கு வங்கி. இயற்கை, பல்லுயிரியம் பற்றி சீமான் பேசும் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும்.
விஜய்யின் அரசியல் வருகை, சினிமா பாசம் கொண்ட இளையோர் மற்றும் பொதுத்தளத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் உண்டாக்குவதைப் போல, நாதக வாக்கு வங்கிக்கும் பாதகத்தை உருவாக்கலாம் என்ற பேச்சு உள்ளது.
எனவேதான், தனது ‘முதன்மை வாக்கு வங்கி’யான தமிழ்த் தேசியம், இயற்கை சூழலியல் வாக்குகளை உறுதிப்படுத்த இரு உத்திகளை கையில் எடுத்துள்ளார். தமிழ்த் தேசியத்துக்கு பெரியார், திமுக எதிர்ப்பை வலுவாக்கி வருகிறார். மற்றொரு புறம் அறிவுசார், சூழலியல் தளத்தில் உள்ள வாக்குகளை வலுப்படுத்த மரங்கள், ஆடு மாடுகள், மலைகள், தண்ணீருக்கான மாநாடுகளை நடத்தி வருகிறார்.
சில கட்சிகளால் விமர்சிக்கப்பட்டாலும், சீமானின் ஆதரவுத் தளம் மட்டுமின்றி பொதுத்தளத்திலும், நாதகவின் ஆடு மாடுகளுக்கான மாநாடு, மாடு மேய்க்கும் போராட்டம், மரங்களின் மாநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வாக்கு அரசியல், எதிர்ப்பு அரசியலுக்கு மத்தியில் சூழலியல் சார்ந்த போராட்டங்களை சீமான் முன்னெடுப்பது, மாற்றம் விரும்புவோர் மத்தியில் நல்ல இமேஜை உருவாக்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது.
மாடுகள் முன்பு சீமான் பேசியது முதலில் விமர்சிக்கப்பட்டது, மேய்ச்சல் உரிமை சார்ந்த முன்னெடுப்பு என அது மாறியபோது விமர்சனங்கள் அடங்கின. மரங்களோடு சீமான் பேசியதை வைரலாக்கி விமர்சித்தார்கள். அதே கருத்தை நடிகர் சூர்யா பேசியதை பரப்பி பதிலடி கொடுத்தார்கள் தம்பிகள்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஆடு மாடுகள் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு, மலை சார்ந்த வாழ்க்கை, தண்ணீர் சார்ந்த தொழில் என ஒவ்வொன்றும் சில சமூகங்களோடு தொடர்புடையது. எனவே இது சார்ந்த வாக்குகளுக்கும் சீமான் குறிவைக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்த கணக்கில்தான் பனையேறி கள் இறக்கும் போராட்டத்தையும், நெசவாளர் வாழ்வுரிமை மாநாட்டையும் சீமான் சமீபத்தில் நடத்தினார்.
தேர்தல் நெருக்கத்தில் வேளாண்மை, மீன்பிடித் தொழில், தமிழ் வணிகர்கள் பாதுகாப்பு என பல்வேறு சமூகங்களை குறிவைக்கும் வகையிலான மாநாடுகளுக்கும் நாதக திட்டமிட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி, கூடுதல் தொகுதிகள், கூடுதல் நிதி என பேரம் பேசிக்கொண்டிருக்கும் சூழலில், தனி ரூட்டில் சீமான் பயணிக்கிறார். எப்படி பார்த்தாலும் மாடுகள், மரங்கள், மலைகள் என வித்தியாசமான மாநாடுகளால் சமூக ஊடகங்களிலும் , அரசியல் களத்திலும் எப்போதும் லைம் லைட்டிலேயே இருக்கிறார் சீமான். இது வாக்குகளாக மாறுமா என தேர்தலின் போதுதான் தெரியும்