சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜ் நிர்வாகத்தை கலைத்து, சமாஜத்தின் இடைக்கால நிர்வாகிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் சாய்பாபா கோயிலை அகில இந்திய சாய் சமாஜம் நிர்வகித்து வருகிறது. இந்த சமாஜத்துக்கு சொந்தமாக பள்ளி, கடைகள் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன. சமாஜத்தின் நிர்வாக குளறுபடி, முறைகேடு தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது நீதிபதிகள், சமாஜத்துக்கு சொந்தமான சொத்துகளின் வரவு, செலவு கணக்குகள், உண்டியல் வருமானம், அசையா சொத்துகளின் நிலை, சமாஜத்தின் நிதி விவரங்கள், சமாஜத்தில் சங்க துணை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்து உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித் துள்ள உத்தரவு: ஆய்வுக்கு சென்ற நீதிபதி பி.என்.பிரகாஷூக்கு சமாஜ் நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. வரவு, செலவு கணக்குகள் முறையாக தணிக்கை செய்யப்படவில்லை. நிர்வாகக் குழு, பொதுக்குழுவில் முடிவு எடுக்காமல் திருமண மண்டபம் கட்டியுள்ளனர்.
சமாஜத்தில் முன்பு 5 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 522 பேர் மட்டுமே உள்ளனர். சமாஜ நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதிகப்படியான தொகை எந்த ஒப்புதலும் பெறப்படாமல் செலவழிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கை அடிப்படையில் சாய் சமாஜ் நிர்வாக குழுவை உடனடியாக கலைக்கிறோம். அந்த சமாஜத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கிறோம்.
இந்தக் குழுவுக்கு பட்டயக்கணக்காளர்கள் அனந்த ராமன், அருண் பாலாஜி ஆகியோர் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். சமாஜத்தின் பொறுப்பாளர் கள் உடனடியாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, ஓய்வு நீதிபதிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்து போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தக்குழு தங்களது நிர்வாகம் தொடர்பான இடைக்கால அறிக்கையை செப்.14-ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.