சென்னை: மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கக் கோரிய விண்ணப்பத்தை 3 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாடுதுறையைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் வாஞ்சிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சோழர் பேரரசினால் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில்களை காண தினந்தோறும் ஏரளமான மக்கள் வருகின்றனர். குறிப்பாக, சூரியனார் கோயில், சுக்கிரன் கோயில், திருமணஞ்சேரி கோயில், பூம்புகார், கும்பகோணம் மகாமகம் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன.
ஆன்மிக சுற்றுலா பயணிகள் வசதிக்காக கடந்த 1934 முதல் இயங்கி வந்த மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரயில் சேவை திடீரென கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது. அந்த ரயில் சேவையை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புரோஜித் நாராயணன் வெங்கடேசன், “ரயிலை மீண்டும் இயக்கும் பட்சத்தில் ஆன்மிக சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள்” என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரயிலை மீண்டும் இயக்குவது குறித்து ரயில்வே துறை தான் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். பின்னர், மனுதாரரின் கோரிக்கை மனுவை 3 மாதத்துக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.