மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தனது அலுவலகத்துக்குகாவல் துணைக் கண்காணிப்பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் சுந்தரேசன் பணியாற்றி வருகிறார்.
சட்டவிரோத மது, சாராயம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது இவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவரது வாகனத்தை பறித்துக் கொண்டதால், டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து டிஎஸ்பி சுந்தரேசன் கூறியதாவது: கடந்த 5-ம் தேதி அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக எனது வாகனத்தை மாவட்ட காவல் துறை தரப்பில் கேட்டார்கள். எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தால் வாகனத்தை வழங்குவதாக தெரிவித்தேன். இதனால், என்னை திருச்செந்தூர் கும்பாபிஷேக பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பணி முடிந்து திரும்பிய பின்னர், முதல்வர் வருகை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.
அந்தப் பணியை முடித்துவிட்டு திரும்பியபோது, அமைச்சர் பாதுகாப்பு பணிக்கு எனது வாகனத்தை தருமாறு மீண்டும் கேட்டனர். அந்த வாகனம் அவ்வப்போது பழுதாவதாக கூறியதையும் கேட்காமல், கடந்த 10-ம் தேதி வாகனத்தை வாங்கிக் கொண்டனர். இதுவரை அந்த வாகனத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் 2 நாட்களாக அலுவலகத்துக்கு நடந்தே சென்றேன்.
நான் பொறுப்பேற்றது முதல் சாராயம், புதுச்சேரி மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்ததால், சிலரது வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக என்னை அழைத்துப் பேசிய உயரதிகாரி, வளைந்து கொடுத்து போகாவிட்டால், விரலை உடைத்துவிடுவார்கள் என்று கூறினார்.
நான் நேர்மையாக இருப்பதால் பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கிறேன். மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றியபோது, ஒரு வழக்கில் தொடர்புடைய காவல் துறையை சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்ததால், என்னை பழிவாங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி. மறுப்பு… எஸ்.பி. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. மாவட்ட காவல் துறையில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக அவர் கூறியதும், வளைந்து போகச் சொன்னதாக கூறியதும் தவறான தகவல். அவ்வாறு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. வழக்கமான நடைமுறைபடிதான் அவர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார்” என்றார்.
அண்ணாமலை கண்டனம்: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருள்கள் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மக்களின் பாராட்டுகளைப் பெற்றவர் டிஎஸ்பி சுந்தரேசன். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவமானப்படுத்தும் நோக்குடன், அவரது வாகனத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதனால் அவர் நடந்தே அலுவலகம் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. மக்களுக்காகப் பணியாற்றும் அதிகாரியை அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக காவல் துறையினரின் தன்மானத்தைப் பாதுகாக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.