மயிலாடுதுறை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் முதல்வருக்கு திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், கொள்ளிடம் புறவழிச் சாலையில் சோதியக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்து வைத்து, கட்சிக் கொடியைஏற்றி வைத்தார்.
பின்னர், சீர்காழி வழியாக திருவெண்காடு சென்று அங்குள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்தார். அதன்பின், அங்கிருந்து மயிலாடுதுறை வரும் வழியில் செம்பதனிருப்பு பகுதியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மயிலாடுதுறையில் பூம்புகார் சாலையில் இருந்து பட்டமங்கல தெரு, கச்சேரி சாலை வழியாக நகர திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், திமுகவினர் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர். பொதுமக்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அளித்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார். சிறிது நேரத்தில் லேசாக மழை பெய்யத் தொடங்கியதால், குடை பிடித்தபடி நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
அதன்பின், திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தையும், கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ.மெய்யநாதன், எம்.பி. ஆர்.சுதா, எம்எல்ஏக்கள் நிவேதாஎம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (ஜூலை 16) காலை மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்று முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார்.