உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், ‘மனுக்கள் கொடுத்தால் குப்பைத் தொட்டிக்குத்தான் போகுது’ என பெண் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அந்த பெண் வசிக்கும் கிராமத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தும்பூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இந்த முகாமில் அமைச்சர் கோவி.செழியன், ‘‘மக்களிடம் வலது கையில் மனு வாங்கி, இடது கையில் பரிசீலித்து, மீண்டும் வலது கையில் திட்டத் தை தீட்டி தருவது தான் ஸ்டாலின் அரசு. ஆமை வேகத்தில் இயங்கிய அரசாங்கத்தை ராக்கெட் வேகத்தில் இயக்குபவர் முதல்வர் ஸ்டாலின்’’ என பேசினார்.
அப்போது, முகாமில் மனு அளிக்க வந்த கொள்ளைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சமன்ஷா மேரி (67) என்பவர், ‘‘நாங்கள் வசிக்கும் பகுதியில் மாதம் ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. தெரு விளக்குகளும் எரிவது இல்லை. இதுகுறித்து புகார் செய்தால் போலீஸில் பிடித்து கொடுத்து விடுவோம் என மனு கொடுக்க வந்த இடத்தில் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்’’ என அமைச்சர் முன்னிலையில் குற்றம்சாட்டிப் பேசினார்.
மேலும், இதுவரை 5 முறை மனுக்கள் கொடுக்கப்பட்டும், அவை குப்பைத் தொட்டிக்கு சென்று விட்டதாகவும், தங்கள் வசிக்கும் பகுதி சுடுபோடு போல இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நேற்று கொள்ளைக்காடு கிராமத்துக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதுவரை பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் அங்கு வந்த கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், கிராம மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.